இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/19/2013

சந்திரனில் மறைந்து கிடக்கும் எரிமலைகள் : அவுஸ்திரேலிய விஞ்ஞானிகளின் ஆய்வு


சந்திரனில், 280 எரிமலைகள் மறைந்து கிடப்பதாக அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

சந்திரன் குறித்து பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில், அவுஸ்திரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

அதில் சந்திரனின் மேற்பரப்பில் 66 எரிமலைகள் இருப்பதற்கான வாய்ப்பு தென்படுவது தெரிந்தது. அதே நேரத்தில் கண்ணுக்கு தெரியாமல் 280 எரிமலைகள் அங்கு மறைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவை சந்திரனின் மேற்பரப்பில் ஈரமற்ற நிலையில் இறுகி கிடக்கின்றன. இந்த தகவலை ஆய்வு மேற்கொண்டுள்ள பேராசிரியர் வில்பெதர்ஸ்டோன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் அறிவித்துள்ளனர். 

இதற்கிடையே, அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் விண்வெளிக்கு செல்ல எட்டு வீரர்களை தேர்வு செய்துள்ளது. இவர்களில் நான்கு பேர் பெண்கள். 

செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களுக்கு ஆட்களை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதற்காக தான் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கு நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் தீவிர பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
»»  read more

4/06/2013

பாலியல் வல்லுறவிலிருந்து பாதுகாத்துகொள்ள உள்ளாடை தயாரிப்பு

பாலியல் வல்லுறவிலிருந்து தற்காப்பை ஏற்படுத்திகொள்ளும் வகையில் பெண்களுக்கான உள்ளாடை ஒன்றை இந்திய பொறியியல் துறை மாணவர்கள் தயாரித்துள்ளனர்.
பெண்களிடம் யாரேனும் தவறாக  நடக்க முயற்சிக்கும்போது, அவர்கள் இவ் ஆடையினூடாக 3,800 கிலோவோல்ட் அதர்ச்சியை எதிர்கொள்வர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ் உள்ளாடையானது அதர்ச்சியினால் எதிரியை முடக்கிய பின்னர், செய்மதி வலையமைப்பினூடாக தானாகவே குறுந்தகவலை பொலிஸ் நிலையங்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆடையில் உணர்த்திகளானது மார்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. வன்முறையான அழுத்தம் காரணமாக குறித்த ஆடைகளில் பொருத்தப்பட்டுள்ள உணர்த்திகள் 82 வரையிலான மின்சார அதர்ச்சிகளை தாக்குவோர் மீது தரும் என தெரிவிக்கப்படுகின்றது.
இச் சாதனத்தின் உருவாக்கத்தில் பங்கேற்ற மனிஷா மோஹன் என்பவர் தெரிவிக்கையில், 'இந்த உள்ளாடையானது செய்மதி வலையமைப்பினூடாகவும் கையடக்கத்தொலைபேசி வலையமைப்பினூடாகவும் பொலிஸாருக்கும் பெற்றோருக்கும் தகவல்களை உடனடியாக தெரிவிக்கின்றது' என்றார். 

'நபர் ஒருவர் ஒரு பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்த முயலும்போது அந்நபர் இப்பெண்ணின் உள்ளாடையில் பொறுத்தப்பட்டுள்ள உணர்த்திகளினூடாக மிக பெரிய மின்சார அதிர்ச்சியை எதிர்கொள்வார். இதன்போது மேற்படி வலையமைப்பிகளினூடாக குறுந்தகவல்கள் உடனடியாக பறிமாற்றப்படுகின்றன' என அவர் மேலும் தெரிவித்தார்.


»»  read more

1/30/2013

விண்வெளிக்​கு குரங்கை அனுப்பி உயிருடன் தரையிறக்கி​ய ஈரான்!


தூது:டெஹ்ரான்:அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கடும் பொருளாதாரத் தடைகளையும் மீறி அணுசக்தி, செயற்கைக் கோள் தயாரிப்பு, ஏவுகணை சோதனை மற்றும் விண்வெளி திட்டங்களை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உயிருள்ள குரங்கு ஒன்றை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பி, மீண்டும் அதை பத்திரமாக பூமிக்குக் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளனர் ஈரான் விஞ்ஞானிகள். இதன்மூலம் ராக்கெட், விண்கலத் தொழில்நுட்பத்தில் அந்த நாடு பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது உறுதியாகியுள்ளது. இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கான நேரடியான சவாலாகக் கருதப்படுகிறது.
ஒரு குரங்குடன் கூடிய விண்கலத்துடன் பிஸ்காம் என்ற ராக்கெட் விண்வெளிக்கு ஏவப்பட்டது. சுமார் 120 கி.மீ. தூரத்தை எட்டிய இந்த ராக்கெட்டிலிருந்து பிரிந்த விண்கலம் பூமிக்குத் திரும்பியது. அதில் இருந்த குரங்கும் உயிருடன் பூமிக்குத் திரும்பி வந்தது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் எங்களது முயற்சியில் இது ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 “சில நாடுகளிடம் மட்டுமே உள்ள இந்தத் தொழில்நுட்பத்தை எங்களது ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிக் காட்டியுள்ளனர்.” என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
ரீ எண்ட்ரி(re entry) தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ராக்கெட்டை மாற்றி வடிவமைத்தால் அதை ஏவுகணைகளாக மாற்ற முடியும். இந்த ஏவுகணை பூமியிலிருந்து சில நூறு கி.மீ. உயரே சென்று அங்கிருந்து திரும்பி தாக்க வேண்டிய நாட்டின் இலக்கு நோக்கி திரும்பி பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து தாக்குதலை நடத்த முடியும். ஏற்கனவே அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஈரானால் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணை தயாரிப்பும் சாத்தியம் என்பதையே இந்த ராக்கெட் சோதனை உறுதிப்படுத்துகிறது.
ஈரானின் இந்த சாதனை இஸ்ரேல், அமெரிக்காவுக்கான எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது. ஆனால், அணு குண்டு தயாரிக்கவில்லை என்றும், மின்சார உற்பத்திக்காகவும், கேன்சர் ட்ரீட்மென்ட் உள்ளிட்ட மருத்துவ காரணங்களுக்காகவுமே அணு சக்தி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஈரான் கூறி வருகிறது.
இது குறித்து பிரான்சின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான புருனோ குருசெல்லே கூறுகையில்; “ஈரானின் இந்த ரீ எண்ட்ரி தொழில்நுட்ப ராக்கெட் மிகப் பெரிய சாதனையாகும். பூமிக்கு வெளியே ராக்கெட்டை ஏவி அதில் பொறுத்தப்பட்ட விண்கலத்தை குறிப்பிட்ட இடத்தை நோக்கி திரும்பி வரச் செய்யும் தொழில்நுட்பத்தை ஈரான் பெற்றுவிட்டதாகவே தெரிகிறது. விண்வெளிக்கு ராக்கெட்டையோ, விண்கலத்தையோ ஏவி அதை பத்திரமாக திரும்பி வரச் செய்ய உயர் அழுத்தத்தைத் தாங்கும், உயர் வெப்ப நிலையைத் தாங்கும் தொழில்நுட்பம் தேவை. இதை ஈரான் பெற்றுவிட்டது. இதனால் இந்த ராக்கெட்டை ஏவுகணையாக மாற்றி அதனால் அணு ஆயுதங்களைக் கூட நெடுந்தொலைவுக்கு ஏவ முடியும்.” என்றார்.
2011ம் ஆண்டிலேயே விண்வெளிக்கு குரங்கை அனுப்புவோம் என்று ஈரான் கூறி வந்தது. ஆனால், அந்த ஆராய்ச்சிகளில் தேக்கம் ஏற்பட்டதால் சுமார் ஓராண்டு தாமதத்துக்குப் பின் தனது முயற்சியில் வென்றுள்ளது ஈரான்.
»»  read more

1/13/2013

பிரிட்டனின் முதலாவது கை-மாற்று அறுவை சிகிச்சை


தனது வலது கையில் உள்ள விரல்களை அசைத்துப் பார்க்க முடிவதைப் பார்த்து வாயில் சிரிப்புடன் கண்களில் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் மார்க் காஹில் பேசுகிறார்.
51 வயதான அவருக்கு ஒருவாரத்துக்கு முன்னர்தான் கை-மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பிரிட்டனில் முதல் தடவையாக அறுவை சிகிச்சை மூலம் புதிதாக மனிதக் கையொன்றைப் பொருத்திக்கொண்டுள்ள முதல் நபர் இவர்தான்.
பிரிட்டனில் லீட்ஸ் மருத்துவமனையில் எட்டு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் போதுதான் இவரது பழைய கை அகற்றப்பட்டு புதிதாக கொடையாளி ஒருவர் வழங்கியிருந்த கையொன்று அவருக்குப் பொருத்தப்பட்டது.
20 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது காலிலும் விரல்களிலும் மூட்டுவாதம் ஏற்பட்டது. பின்னர் அதுவே 5 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது வலது கைக்கும் பரவியது. அவரது கை விரல்களை விரிக்கமுடியாதபடி, கையினால் எதனையும் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது.

'எனது கை'

பயோனிக் என்ற நவீன செயற்கை முறை இயந்திரக் கையை பொருத்துவது தான் ஒரே வழி என்று இருந்தபோது தான், இவர் இன்னொரு மனிதக் கையை பொருத்தும் கை-மாற்று அறுவை சிகிச்சை செய்துபார்க்கச் சம்மதித்தார்.
இவருக்கு புதிய கையை பொருத்திய மருத்துவ நிபுணர் பேராசிரியர் சைமன் கே, இவரது புதிய கையில் இன்னும் பெரிய முன்னேற்றம் தெரியும் என்று பிபிசியிடம் நம்பிக்கை தெரிவித்தார்.
கை மாற்று சிகிச்சைகள் அமெரிக்காவிலும் பிரான்சிலும் இதற்கு முன்னர் நடந்திருக்கின்றன. உலகெங்கிலும் இவ்வாறான 60 கை-மாற்று சிகிச்சைகள் இதுவரை நடந்துள்ளன.
லீட்ஸ் மருத்துவமனையில் இப்போது நடந்திருக்கின்ற பிரிட்டனின் முதலாவது முயற்சி, கை கால்களை இழந்துள்ள பலருக்கு இதுபோல உதவமுடியும் என்கிற நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.
பிரிட்டனில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இந்த கை-மாற்று சிகிச்சைக்கான திட்டமிடல்கள் நடந்துவந்தன.
பிரிட்டன் மருத்துவத் துறையின் இந்தக் கன்னி முயற்சிக்கு பொருத்தமான ஒருவர் கிடைக்கும்வரை காத்திருந்தார்கள்.
உடல்நிலையில் பொருத்தமானவராகவும் இன்னொருவரின் கையை பொருத்திக்கொள்ளுமளவிற்கு மனதளவில் தயாரானவராகவும் ஒருவர் கிடைக்க வேண்டி இருந்தது.
'இதனை இன்னொருவரின் கை என்று நான் நினைக்கவே இல்லை. எனது கையைப் போலத்தான் நான் உணர்கிறேன். என்னால் எனது கையைபோல அசைக்கமுடிகிறது.. அப்படித்தான் உணர்கிறேன்' என்று பிபிசியிடம் கூறினார் மார்க் காஹில்.
இவரது ஆசை முழுமையாக நிறைவேற இன்னும் காலம் எடுக்கும். ஆனால் இப்போதே அவரால் விரல்களை அசைத்துப்பார்க்க முடிகிறது என்பதே ஒரு பெரிய தெம்பையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது.
»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா